ஜே.வி.பியன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தை தாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்க ”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை சபையில் எழுப்ப வேண்டாம்.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். எனவே நாம் அதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றோம். ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவை விடுங்கள். நாம் ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துகின்றோம்.
இந்த விடயம் குறித்து நீங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது சாணக்கியனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். ஜனாதிபதியுடனான சந்திப்பினை இந்த வாரத்திற்குள் ஒழுங்குபடுத்துகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.