மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் இன்று திங்கட்கிழமை (23) காலை மீட்கப்பட்டுள்ளன.
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டு நடுக்குடா காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 1360 கிலோ பீடி இலைகள் மற்றும் 29 ஆயிரத்து 120 பீடிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.