இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்
காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும்
கிளிநொச்சி
இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இவ்வாறு ஆறு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கடல் சீற்றமடைந்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
திருகோணமலை டச் பே கடற்கரையில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருப்பதனால் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிட்டப்பட்டுள்ளதுடன்,
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குளிக்கும் இடத்தில் கடல் அதிகபடியாக உள்வாங்கியிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

மட்டக்களப்பு
வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில்; மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்;, நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்;, பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள் மிகப்பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.
குறிப்பாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 3அங்குலமும் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 28அடி 8அங்குலமும் தும்பற்கேணிக் குளம் 15 கன அடி ஒயர்ந்துள்ளதாக பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள கிராமியக் குளங்கள் முற்றாக நிரம்பியுள்ளன.

ஊவா
ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் ஏதேனும் பேரழிவு சூழ்நிலை தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு
இதேவேளை மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக, வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை, நுவரெலியா, பதுளை கண்டி, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெலிமடை
வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இவ்வாறு மண் மேடு சரிந்து விழுந்திருந்ததுடன், இதன் காரணமாக வெலிமடை – மஸ்பன்ன வீதியிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 173.5 மி.மீ, அம்பாறை மாவட்டத்தின் லகுகலவில் பதிவாகியுள்ளது.
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டியவில் 120.5 மி.மீ மற்றும் கிராதுருக்கோட்டை பிரதேசத்தில் 112 மி.மீ மழைவீழ்ச்சியும், நுவரெலியாவின் கோனபிட்டிய பிரதேசத்தில் 98 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
காலி
இதேவேளை காலி பிரதேசத்தில் இன்று பெய்த மழை காரணமாக நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, காலி – வக்வெல்ல வீதியூடான போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

















