தம்புள்ளையில் நேற்றிரவு (11) மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தசூன் ஷானக்க தலைமையிலான அணி 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.
அது மாத்திரமன்றி இலங்கை அணி, 14 ஆண்டுகால வறட்சியை இந்த வெற்றியுடன் முடிவுக்கும் கொண்டு வந்தது.
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட (12 ஓவர்கள்) நிலையில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பட்டம் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அதிரடியாக 160 ஓட்டங்களை குவித்தது.
தசூன் ஷானக்க அதிகபடியாக ஒன்பது பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஓட்டங்களை விளாசினார்.
அவருக்கு அடுத்த படியாக குசல் மெண்டீஸ் 16 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் 161 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 148 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா 12 பந்துகளில் 45 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
பாகிஸ்தானின் விறுவிறுப்பான சேஸிங்கில் முதல் நான்கு ஓவர்களுக்குள் ஆகா மூன்று சிக்ஸர்களையும் ஐந்து பவுண்டரிகளையும் விளாசி இலக்கை 101 ஆகக் குறைத்தமை விசேட அம்சமாகும்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பத்திரான (2-34) மற்றும் எஷான் மலிங்க (1-27) ஆகியோர் இறுதியில் இரண்டு நேர்த்தியான ஓவர்களை வீசி பாகிஸ்தான் அணியை இலக்கினை அடைய முடியாது கட்டுப்படுத்தினர்.
முன்னணி சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனால், போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவானார்.
2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இலங்கை பெற்ற முதல் டி20 வெற்றி இதுவாகும்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி:20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் நடைபெறவிருந்த இரண்டாவது டி:20 போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அடுத்த மாதம் இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் டி20 உலகக் கிண்ணத்துக்கான இரு அணிகளின் ஆயத்தத்துக்கான ஒரு பகுதியாக இந்தத் தொடர் அமைந்தது.
பாகிஸ்தான் தனது அனைத்து உலகக் கிண்ண ஆட்டங்களையும் இலங்கையில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















