பர்மிங்காம் மாநகரசபையின் கழிவு சேகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையாண்ட விதம் காரணமாக, ‘யுனைட்’ (Unite) தொழிற்சங்கம், தொழிலாளர் கட்சிக்கு (Labour Party) வழங்கும் நிதியை 40% குறைப்பதாக அறிவித்துள்ளது.
பர்மிங்காம் மாநகரசபையில் நிலவி வரும் குப்பை சேகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைமையிலான மாநகரசபையின் செயல்பாடுகள் தொழிலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, யுனைட் தொழிற்சங்கம் தொழிலாளர் கட்சிக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 1.45 மில்லியன் பவுண்டுகள் நிதியை 580,000 பவுண்டுகளால் குறைத்துள்ளது.
இதேவேளை, தொழிலாளர் கட்சி உண்மையில் யாருடைய பக்கம் நிற்கிறது என்ற கேள்வி தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது எனவும் பர்மிங்காம் தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை இனி பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் யுனைட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் (Sharon Graham) தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர் கட்சியுடனான உறவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே 2024-ஆம் ஆண்டில் 3.76 மில்லியன் பவுண்டுகள் நிதிப் பற்றாக்குறையில் உள்ள தொழிலாளர் கட்சிக்கு, இந்த 40% நிதிக்குறைப்பு ஒரு பேரிடியாகக் கருதப்படுகிறது.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மூலம் நிதி கிடைத்தாலும், முக்கியமான தொழிற்சங்கங்களின் ஆதரவு குறைவது கட்சியின் எதிர்காலத்திற்குச் சவாலாக அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப் பல சலுகைகளை வழங்கிய போதிலும், தொழிற்சங்கம் நியாயமற்ற முறையில் பெரிய அளவிலான பணத் தொகைகளைக் கேட்பதாக பர்மிங்காம் மாநகரசபை குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் கோடையில் புதிய கழிவு சேகரிப்பு முறையை அமுல்படுத்த உள்ளதாக மாநகரசபை உறுதியளித்துள்ளது.












