பிரபல நகைச்சுவை நடிகர் பீட்டர் கே (Peter Kay) நடித்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த யூட்டிலிட்டா அரீனா பர்மிங்காம் ( Utilita Arena Birmingham) அரங்கில் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டு ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகரில் நடைபெற்று சுமார் 45 நிமிடங்கள் ஆனபோது, மேடையில் இருந்த பீட்டர் கேய் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரங்கில் இருந்த மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிசார் (West Midlands Police) வெளியிட்ட அறிக்கையில், ‘சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரங்கம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வலையமைப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருப்பினும், இந்த சம்பவம் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.














