இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு பகுதிநேர போர்நிறுத்தத்தை லெபனான் திங்களன்று (01) அறிவித்துள்ளது.
நாட்டைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையைத் தூண்டிவரும் மோதலில் பதட்டத்தைத் தணிப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வந்தது.
இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான பின்னரும், களத்தில் சண்டைகளும் எல்லை தாண்டிய தாக்குதல்களும் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உடன்பாடு போர்களுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைப்பதாக அமையாது.
மாறாக, ஹிஸ்புல்லாவின் ஆதிக்கத்துடன் பெருமளவில் தொடர்புடைய பகுதிகளான பெய்ரூட் மற்றும் அதன் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஹிஸ்புல்லா இஸ்ரேலியப் பகுதி மீதான தாக்குதல்களைக் குறைக்கும் அல்லது இடைநிறுத்தும் என்றும் இது வலியுறுத்துகிறது என்றும் வொஷிங்டனில் உள்ள லெபனான் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், தெற்கு லெபனானில் திங்கள் மாலை வரையிலும் மோதல்கள் தொடர்ந்தன.
லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட இரண்டு எறிகணைகளை இடைமறித்ததாகவும், இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் பின்னர் தெரிவித்தது.
















