தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (08) காலை 07:37 மணிக்கு (ஜிஎம்டி ஞாயிறு 23:37) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
அவற்றில் சில எச்சரிக்கைகள், சில மணிநேரங்களுக்குப் பின்னர் இரத்து செய்யப்பட்டன.
கட்டிடங்கள் இடிந்து விழுவதை வீடியோக்களும் படங்களும் காட்டின;
அதில், ஜாலிபீ துரித உணவகம் ஒன்று தரைமட்டமாகிப் போன காட்சியும் அடங்கும்.
தெற்கு கோட்டாபாட்டோ, சுல்தான் குடாரத், சரங்கானி ஆகிய பல மாகாணங்களிலும், ஜெனரல் சாண்டோஸ் நகரிலும் குறைந்தது 134 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.













