பிரித்தானியாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளின் நாயகனான ‘ராபின் ஹுட்’ உடன் தொடர்புடையதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் புகழ்பெற்ற காட்டின் மையப்பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்றதுமான பழமையான ஓக் மரம் (Major Oak) உயிரிழந்துவிட்டதாக தாவரவியல் நிபுணர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ஷெர்வுட் காட்டில் அமைந்துள்ள இந்த ‘மேஜர் ஓக்’ மரம், சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்டுள்ளதுடன், இது பிரிட்டனின் மிகப்பெரிய ஓக் மரங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது.
இக்காட்டினைப் பராமரித்து வரும் ‘பறவைகளைப் பாதுகாப்பதற்கான அரச சங்கம்’ என்ற தொண்டு நிறுவனம், இந்த மரம் இம்முறை தனது முதல் வசந்த காலத்தில் ஒரு இலை கூடத் துளிர்க்காமல் பொலிவிழந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, இது முழுமையாக இறந்துவிட்டதாகத் விஞ்ஞானிகள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
உலகளவில் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரத்தின் மரபணு அழியாமல் பாதுகாக்கும் நோக்கில், இதன் இளம் நாற்றுகள் ஏற்கனவே உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுப் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














