ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்களின் முக்கிய உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அமெரிக்காவுடனான மோதல் போக்கைத் தணிக்கும் நோக்கில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரான் போர் விவகாரத்தில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கடந்த வாரம் நடைபெற்ற நேட்டோ கூட்டத்தில், அமெரிக்காவின் நிதியில் “இலவசப் பயணம்” செய்யும் நட்பு நாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்படுவது குறித்து ஆறு மாத கால மறுஆய்வு நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஐரோப்பியப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, அவசர காலங்களில் நேட்டோ கூட்டணிக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்க ராணுவத்தின் விசேட ஆற்றல் திறன்களைக் குறைப்பதற்கும் அமெரிக்கா ஏற்கனவே முடிவெடுத்துள்ளதால், அந்தப் பாதுகாப்பு இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்று தெரியாமல் ஐரோப்பிய நாடுகள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














