கடந்த ஜூலை 23 அன்று இரவு வத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டினை அடுத்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட அந்த சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையமூலமாக நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டனர்.
பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் ஆயுதமேந்திய நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.
அந்த இருவரையும் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னரே, சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவது குறித்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியில் இருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர்.
வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடையவர்களே இந்தச் சந்தேக நபர்களாவர்.
விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், CID அதிகாரிகள் அவர்களிடமிருந்து ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டனர்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.







