இங்கிலாந்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளில் நிலவும் பரந்த அளவிலான அதிருப்தியைத் தொடர்ந்து, அது குறித்த புதிய விசாரணையை நாடாளுமன்றக் குழு ஆரம்பித்துள்ளது.
பட்டதாரிகள் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய வருமான வரம்பு உயர்த்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளமை மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் நியாயமானவையா என்பது குறித்து நிதிக்குழு (Treasury Committee) ஆராயவுள்ளது.
குறிப்பாக, ‘Plan 2’ திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், வருமான வரி மற்றும் கடன் தவணை எனத் தமது ஊதியத்தில் பெரும் பகுதியை இழப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
‘இது ஒரு சாதாரண கடன் அல்ல’ எனத் தெரிவித்து மாணவர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போது வட்டியுடன் சேர்த்து கடன் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் துணைப் பிரதமர் நிக் கிளெக் (Nick Clegg) இந்த முறையை ஒரு ‘குழப்பம்’ என தெரிவித்துள்ளார்.
இது குறித்து 16 வயதுக்கு மேற்பட்ட எவரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
முந்தைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைபாடுகள் நிறைந்த இந்த நிதி முறையைச் சீரமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் Rachel Reeves தெரிவித்துள்ளார்.













