நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பில் தற்போது இடம்பெற்று வரும் “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது , இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான காரணங்களையும் விளக்கினார்.
சுற்றுலாத்துறை வீழ்ச்சி:நாட்டின் முக்கிய வருமான வழியாக விளங்கும் சுற்றுலாத்துறை, கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஏப்ரலில் 29 சதவீதம் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணம் குறைவு: உலகளாவிய பிரச்சினைகள் காரணமாக நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவும் குறைவடைந்துள்ளது.
இவை அனைத்தும் சேர்ந்து உள்நாட்டில் டொலர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எகிறும் எரிபொருள் இறக்குமதி செலவினம்: ரூபாவின் வீழ்ச்சி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவினம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மாதம் ஒன்றுக்கான எரிபொருள் இறக்குமதி செலவினம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இது ரூபாவின் வீழ்ச்சியையும் டொலருக்கான தேவையையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை குறித்தும் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் மீளாய்வை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதன்போது அரசாங்கத்தின் புதிய யோசனைகள் சில நாணய நிதியத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்:
“தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு, குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், இறக்குமதி செலவினங்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்குச் சகல பிரஜைகளும் அரசாங்கத்திற்குத் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரதான சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கமளித்துள்ளார்.
பலமிக்க பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியதே தமது அரசாங்கத்தின் முதலாவது சவால் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய காலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்திய முக்கிய காரணிகளாக ஜனாதிபதி பட்டியலிட்டார்:
சர்வதேச வரிக்கொள்கை: பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை காரணமாக எமது பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்பட்டது.
டித்வா சூறாவளி அனர்த்தம்: அண்மைய வரலாற்றில் உள்நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய ‘டித்வா’ (Dithwa) சூறாவளி அனர்த்தத்தில் இருந்து மீண்டெழுவதே பெரும் சவாலாக அமைந்தது.
மத்திய கிழக்கு போர் சூழல்: மத்திய கிழக்கினை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள போர் சூழல் காரணமாக, உலகிலுள்ள ஏனைய வளரும் நாடுகளைப் போலவே இலங்கையும் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
பலமான திறைசேரியும் எரிபொருள், மின்சார நிவாரணங்களும்: மத்திய கிழக்கு போர் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், அதனை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
“இலங்கை வரலாற்றில் திறைசேரியில் (Treasury) தற்போது போதியளவு நிதி இருப்பு உள்ளது.
அதனாலேயே, டித்வா அனர்த்த பாதிப்புகளில் இருந்து மீள 50,000 கோடி ரூபாய் வரை எம்மால் செலவிட முடிந்தது” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் எரிபொருள் நிவாரணம்: எரிபொருள் நிவாரணங்களை வழங்குவதற்காக ஒட்டுமொத்தமாக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 2 மாதங்களுக்கும் மேலும் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் நிவாரணம் வழங்குகிறது.
மின்சாரக் கட்டண நிவாரணம்: எரிபொருள் விலை உயர்வால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டாலும், 95 சதவீதமான சாதாரண மின் நுகர்வோர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை.
அவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளதுடன், இந்த நிவாரணங்கள் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்படும்.
எஞ்சிய 5 சதவீதமான உயர் நுகர்வோருக்கே கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாட்டிற்குச் சிறந்த அரச சேவை தேவைப்படுவதை உணர்ந்து, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பானது 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன் அடுத்த கட்டமாக, வரும் ஜனவரி மாதத்தில் புதிய சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் என உறுதியளித்தார்.














