பயணிகள் படகை தவறவிட்ட அதிபர் ஒருவர் மீன் பிடி படகில் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட வேளை நயினாதீவு கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது , சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலையில் சிக்கி நிலை தடுமாறிய நிலையில் அதிபர் தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார்.
நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் படகோட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















