இம்முறைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வைகாசி (வெசாக்) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவனொளிபாதமலையின் உச்சி மழுவில் பல்வேறு விசேட மத வழிபாட்டுத் திட்டங்கள் மற்றும் பூஜைகள் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
உச்சி மழுவில் நடைபெற்ற இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து, யாத்திரைக் காலத்தில் அங்கு பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன நேற்று நள்ளிரவுக்குப் பின் மலையிலிருந்து கீழ்நோக்கிக் கொண்டுவரப்பட்டன.
இந்தப் புனிதப் பொருட்கள் அனைத்தும் நான்கு பிரதான வீதிகள் ஊடாக பெல்மடுல்ல, கல்பொத்தாவல ஸ்ரீ பாத ரஜமகா விகாரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இதற்கமைய, இரத்தினபுரி வீதி வழியிலான உத்தியோகபூர்வ ஊர்வலம் சிவனொளிபாதமலை உச்சி மழுவிலிருந்து கல்பொத்தாவல ஸ்ரீ பாத ரஜமகா விகாரையை நோக்கி இன்று (31) அதிகாலை பக்திப் பரவசத்துடன் புறப்பட்டது.
இவ்வாறு விசேட ஊர்வலம் மூலம் கொண்டு செல்லப்படும் புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன, அடுத்த யாத்திரைக் காலம் ஆரம்பமாகும் வரையிலான (யாத்திரையற்ற காலம் )காலப்பகுதியில் கல்பொத்தாவல ஸ்ரீ பாத ரஜமகா விகாரையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்படும் என்று பெங்கமுவே தம்மதின்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் உந்துவப் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமாகும் இந்தச் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம், வெசாக் பௌர்ணமி தினத்துடன் நிறைவடைவது வழமையாகும்.













