சீனாவின் மேற்கு மாகாணமான கன்சுவின் (Gansu) மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் இன்னும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவைத் தாக்கியுள்ள கொடூரமான இடிமின்னலுடன் கூடிய புயல் காரணமாக இதுவரை 275க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கன்சு மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஆரம்பத்தில் மொத்தம் 33 பேர் சிக்கியிருந்தனர்.
அவர்களுள் 17 பேர் இதுவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், எஞ்சிய 16 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய ஹூபெய் (Hubei) மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் நேற்று இரவு வீசிய பயங்கர புயல் காரணமாகக் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என ஜின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு மணிக்கு 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஹுவாங்ஷி, ஹுவாங்காங், எஜோவ் மற்றும் சியானிங் ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை நிலவரப்படி 275 பேர் காயமடைந்துள்ளனர்.















