ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகம், ஒழுங்குபடுத்தல், மேம்பாடு மற்றும் செயற்பாடுகளுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் புதிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மறுசீரமைக்கும் நோக்கில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு 2026 ஜூன் 8 ஆம் திகதி அமைச்சரவை முதற்கட்ட அனுமதி வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து சட்ட வரைவாளர் சட்டமூலத்தை தயாரித்துள்ளதுடன், சட்டமா அதிபரின் அவதானிப்புகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் கிரிக்கெட் விளையாட்டில் நல்லாட்சியை, நேர்மையை, வெளிப்படைத்தன்மையை, பொறுப்புக்கூறலை, உள்ளடக்கத்தை மற்றும் சம வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், விளையாட்டில் ஈடுபடும் அனைத்து தரப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதோடு, ஊழல் மற்றும் பிற முறைகேடுகளிலிருந்து கிரிக்கெட் விளையாட்டை பாதுகாக்கவும் இந்த சட்டமூலம் வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறுவல், அதிகாரங்கள் மற்றும் பணிகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக, சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















