மாத்தறை, மிரிஸ்ஸ – தலாரம்ப கடற்பகுதியில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 17 மூடைகளில் இருந்த போதைப்பொருள், ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடலோரக் காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (29) மிரிஸ்ஸ தலாரம்ப கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கரைக்கு சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் தொகையொன்று இறக்கப்படுவதாக இலங்கை கடற்படைக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














