இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் செயல்படுவார்கள் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது,
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பாதுகாப்பு வளைய விதிமுறையின் கீழ் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். விரைவில் இந்திய வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவிருக்கின்றனர். நியூசிலாந்து தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியோடு விளையாடிவருகிறது.
இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இறுதிப் போட்டிக்கு கள நடுவர்களாக இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் இருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு நடுவர்களும் ஐ.சி.சி.யின் எலைட் குழுவில் இருப்பவர்கள். இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் 53 டெஸ்ட் போட்டிகளிலும், மைக்கல் கோஃப் 19 டெஸ்ட் போட்டிகளிலும் நடுவர்களாகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள். இந்தப் போட்டியின் ஆட்ட நடுவராக கிறிஸ் பிரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நடுவர்களை நியமிப்பதற்குப் பதிலாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஐ.சி.சி. தகவல் வழங்கியுள்ளது. போட்டி நடுவர்களும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.