லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 18 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 73 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், சமித் பட்டேல் மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர், இசுரு உதான மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 64 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் ரவி ராம்போல் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அசான் பிரியஞ்சன் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.