லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 18ஆவது லீக் போட்டியில் கண்டி வோரியஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், கண்டி வோரியஸ் அணியும், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரமேஸ் மெண்டிஸ் 41 ஒட்டங்களையும் ஜெயதிலக்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கண்டி வோரியஸ் அணியின் பந்துவீச்சில், பினுர பெனார்டோ மற்றும் அல் அமீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நிமேஷ் விமுக்தி, ஷிராஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி வோரியஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரவி பொபாரா ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் அஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், இம்ரான் தஹீர் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரவி பொபாரா தெரிவுசெய்யப்பட்டார்.