2022ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரில், லாகூர் கலெண்டர்ஸ் அணி முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
லாகூர் மைதானத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், லாகூர் கலெண்டர்ஸ் அணியும் முல்தான் சுல்தான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாகூர் கலெண்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் கலெண்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹபீஸ் 69 ஓட்டங்களையும் ஹரி புரூக் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில், அசீப் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி மற்றும் தானி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால், லாகூர் கலெண்டர்ஸ் அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்த லாகூர் கலெண்டர்ஸ் அணி தற்போது முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முல்தான் சுல்தான்ஸ் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குஷ்தீல் ஷா 32 ஓட்டங்களையும் டிம் டேவிட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லாகூர் கலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் மற்றும் ஷமான் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹரீஸ் ரவூப் மற்றும் ஷமான் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 46 பந்துகளில் ஒரு சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ஹபீஸ் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக முல்தான் சுல்தான்ஸ் அணியின் தலைவர் மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.