உக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை சபையில் இருந்து ரஷ்யாவை இடைநீக்க முடியும் என்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
ரஷ்யாவை மனித உரிமை சபையில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்படும் மூன்றாவது தீர்மானம் இது. ஏற்கெனவே ரஷ்யாவை கண்டித்து நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும் முறையே 141, 140 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேறின.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த, வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகளின் செயல்கள் நட்பற்ற நடத்தையாக பார்க்கப்படும் என்றும், இதனால் இரு தரப்பு உறவுகளில் தாக்கம் இருக்கும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஜெனீவாவில் இருந்து இயங்கும் மனித உரிமை சபையில் இருந்து நாடுகளை இடைநீக்கம் செய்வது அரிதாகவே நடக்கும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனாதிபதி மொம்மர் கடாஃபி ஆதரவு அரசப் படையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய வன்முறைக்காக லிபியா இப்படி இடைநீக்கத்தை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.