சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதோடு, தொடரையும் வென்றுள்ளது.
ஹராரே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இன்னசென்ட் காயா 63 ஓட்டங்களையும் ரஸா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரீட் அஹமட் 3 விக்கெட்டுகளையும் ஃபசல்ஹக் பாரூக்கி, நபி மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 229 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 44.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் ரஹமத் சஹா 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிளெஸிங் முஸரபானி மற்றும் டொனால்ட் ட்ரிபானோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 141 பந்துகளில் 16 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இப்ராஹிம் சத்ரான் தெரிவுசெய்யப்பட்டார்.