மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
பார்படோஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் மேயர்ஸ் 105 ஓட்டங்களையும் பூரான் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், போல்ட் 3 விக்கெட்டுகளையும் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும் சவுத்தீ, லொக்கி பெர்குசன் மற்றும் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 302 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 69 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் கரிஹா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டொம் லதமும் தொடரின் நாயகனாக மிட்செல் சான்ட்னரும் தெரிவுசெய்யப்பட்டனர்.