தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஆட்டநேர முடிவில், ஜோனி பேயர்ஸ்டொவ் 38 ஓட்டங்களுடனும் ஸெக் க்ரெவ்லி 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 40 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
மன்செஸ்டர்- மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரபாடா 36 ஓட்டங்களையும் கீகன் பீட்டர்சன் மற்றும் வெர்னெய்ன் ஆகியோர் தலா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் புரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றது.
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.