ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்று குழு-01இல் நடைபெற்ற தொடரின் 37ஆவது போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அடிலெய்ட் – ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியும் அயர்லாந்துக் கிரிக்கெட் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் பின் அலென் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் ஹெட்ரிக் விக்கெட்டும், டிலேனி 2 விக்கெட்டுகளையும் மார்க் அடாயர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்துக் கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் 37 ஓட்டங்களையும் ஹென்ரிவ் பால்பிரைன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.