நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர். 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.
லக்னொவ் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சான்ட்னர் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களையும் சப்மான் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, வொஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 100 என்ற எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்ய குமார் யாதவ், ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 31 பந்துகளில் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்ய குமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.