மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், முதல் அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எட்டு ஆண்டுகளாக நடைபெறும் மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், ஏழு முறை அவுஸ்ரேலியா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கேப் டவுணில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணியும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மூனி 54 ஓட்டங்களையும் லேனிங் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சீகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், அவுஸ்ரேலியா அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்மன்பீரித் கவுர் 52 ஓட்டங்களையும் ஜெமீமா ரொட்ரிக்கியுஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் டார்சி பிரவுன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேகன் ஷட் மற்றும் ஜொனாசென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்;.
இப்போட்டியின் ஆட்டநாயகியாக, 31 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆஷ்லே கார்ட்னர் தெரிவுசெய்யப்பட்டார்.