விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், 44 முக்கியமான தொழில்நுட்பங்களில் 37இல் சீனா முன்னிலைப் பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு, விண்வெளி, ரோபாட்டிக்ஸ், எரிசக்தி, சுற்றுச்சூழல், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் முக்கிய குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் சீனா உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லரசாக மாறும் நிலையில் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், இயந்திர கற்றல், மின்சார பேட்டரிகள், அணுசக்தி, ஒளிமின்னழுத்தங்கள், குவாண்டம் சென்சார்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் பிரித்தெடுத்தல் ஆகியவை அடங்கும்.
சில துறைகளில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் வேரூன்றியுள்ளது. சில தொழில்நுட்பங்களுக்கான உலகின் முதல் 10 முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் அமைந்துள்ளன.