பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஆளுநரின் வருகையைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, மாநகர காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும், கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.