விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுள் ஜன்னா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி சிறுவர்கள், மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலைகள் அந்த பிள்ளைகள் கல்விகற்க ஏதுவான இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இங்கு கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாணவர்களை கையாளும் ஆசிரியைகள் தாய்க்கு நிகராக அவர்களை கவனிப்பது ஆசிரியப்பணிக்கு மகுடமாக அமைந்துள்ளது.
இப்பாடசாலையிலும் அப்படியான தேவைகள் பூர்த்திசெய்யப்பட்ட வேண்டியுள்ளது. அவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டிய தேவைகள் தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கு தான் முன்மொழிவுகளை முன்வைக்க உள்ளேன். பின்தங்கிய, கரையோரப்பிரதேச மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் எனும் பொதுவான கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது.
அம்பாறை மாவட்டத்திலும் சரி ஏனைய கரையோர பிரதேசங்களிலும் சரி கரையோரத்தை சேர்ந்த பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த காலங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கல்விக்கு ஏழ்மை தடையல்ல என்பதை கடந்த காலங்களில் சாதித்த பலருடைய சாதனைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பாடசாலை இணைப்பாளர் எம்.எம். ஷியாம், தொழிலதிபர் எம்.எம். ரஸீன் உட்பட பாடசாலை உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.