யாழ்,வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளன.
அன்றைய தினம் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் , பாதிக்கப்பட்டவர்கள் நலன்காக்கும் நோக்குடன் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.
இது தொடர்பில் மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவிக்கையில்”இளைஞனின் மரணம் கொலை என்பது தெட்ட தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கு விசாரணைகளின் போது இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் அனைத்து சட்டத்தரணிகளை முன்னிலையாக வேண்டும்.
குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் முன்னிலையாக வேண்டும். பொலிஸ் காவலில் மரணம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட சவால். அதனை நாம் எதிர்கொள்வோம் இந்த கொலைக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதிமன்றில் முன்னிலையாவோம்” இவ்வாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அதேவேளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது , உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் , உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனும் மன்றில் தோன்றி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.