அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் இங்லீஸ் 110 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்னா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 80 ஓட்டங்களையும் இசான் கிசான் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும் ஜேஸன் பெரேன்டோர்ப், மெத்தியூ ஷோர்ட் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை மறுதினம் திருவானந்தப்புரத்தில் நடைபெறவுள்ளது.