‘சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்’ என அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அமுலாக்கத்துறையினரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அமலாக்கத்துறை தரப்பில், ‛‛சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார். வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதையடுத்து, அமுலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 21ம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ம் திகதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.