யுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம் மற்றும் நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில், 11.73 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
குறித்த எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு முதல் பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையில் 12 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து 12 ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோதல் என்பது இடம்பெயர்வுக்கு மிக ஆழமான தூண்டுதலாக காணப்படுவதாக என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், சூடானின் உள்நாட்டுப் போர் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சிரியா போர் உலகின் மிகப்பெரிய இடம்பெயர்வுக்கு நெருக்கடியாக உள்ளதுடன், 13.8 மில்லியன் மக்கள் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றம் ஏற்படாத வரை, இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதை நிறுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் அகதிகள் மற்றும் ஏனையோரின் எண்ணிக்கை 43.4 மில்லியனாக உயர்வடைந்துள்ள போதிலும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது சொந்த நாடுகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.