தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா? அல்லது இறக்குமதி பொருளாதாரமா? என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா? என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க என்னை விவாதத்திற்கு அழைக்கிறார்.
தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும். முன்னர் குறிப்பிட்டதுபோல், அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும். யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும்.
உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும் வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்.
அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. எனக்குப் பலஅரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை உருவாக்கியிருந்தால் இன்று பங்களாதேஷ் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.நாட்டின் பொறுப்பை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம்.
அடுத்த ஆண்டு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். நாடு முழுவதும் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதோடு, விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.