நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சியொன்றின் தேவை எழுந்துள்ளதால், ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியை மக்கள் எதிர்க்கட்சியாக தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் கம்பஹா மாவட்ட கூட்டம் நீர்க்கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஹொட்டலில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்
எனது செயற்பாடுகள், நான் இதற்கு முன்னர் இருந்தக் கட்சிகளுக்கு பலன் இல்லை என்றே அந்தக் கட்சியினரால் எனக்கு முத்திரைக் குத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்
திருடர்களை பிடிக்கும் எனது போராட்டத்தின்போது, நான் முதலில் பிடித்தது எனது கட்சிக்கார்களைத்தான்.
இந்தத் திருடர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியாது என்பதால்தான் நான் வெளியே வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்
எம்மை விமர்சிக்கும் எனது கொள்கைகளுக்கு எதிரான பலர் கட்சிகளின் சலூன் கதவுகள் வாயிலாக வந்துள்ளார்கள். இதனால்தான் நான் புதியக் கட்சிக்கு வந்தேன். இன்று எமக்கு பலமானதொரு எதிர்க்கட்சியின் தேவை எழுந்துள்ளதுடன் எமக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தேவையில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தோ, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தோ மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுடன் எமது கட்சியின் சின்னமாக ஒலிவாங்கி உள்ளது. குரல் இல்லாத மக்களின் குரலாக இந்த ஒலிவாங்கி தொடர்ந்தும் செயற்படும் என அவர் தெரிவித்தார்
இதில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான், கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது