இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 374 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும், இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், 24 மரணங்கள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.