ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு 31 மாகாணங்களில் இடம்பெற்று வரும் குறித்த போராட்டங்களால் இதுவரை 60 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 2,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் உள்ளூர் நாணயமான ரியாலின் மதிப்பு சரிவு காரணமாக அந்நாட்டில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
தொடக்கத்தில் பொருளாதாரக் குறைகளுக்காகத் தொடங்கிய இந்த எதிர்ப்புகள், தற்போது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளதுடன் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன.
இதேவேளை , இந்த மோதல்களில் இதுவரை முப்பத்தாறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறை முறைகளைக் கையாண்டபோதிலும் ஆர்ப்பாட்டங்கள் குறையவில்லை.
நாட்டின் ஜனதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், போராட்டத்திற்குத் தெளிவான தலைமை இல்லாததால் அமைதி திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.
குறிப்பாக, ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தைப் பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்படுவது ஆட்சியாளர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.



















