ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தூய எரிசக்திக்கு (Clean Energy) மாறும் திட்டங்களை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த காற்று, சூரிய ஒளி மற்றும் அணுசக்தி மூலங்களே சிறந்த மாற்றாக அமையும் என்றும் எரிசக்தி அமைச்சர் எட் மிலிபான்ட் (Ed Miliband) தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள முக்கிய உரையில், வீடுகளில் சோலார் தகடுகள் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை அவர் அறிவிக்கவுள்ளார்.
மார்ச் மாதத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டொலரைத் தாண்டியுள்ள நிலையில், மின்சார வாகனங்கள் மற்றும் ஹீட் பம்புகளுக்கான தேவை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Ed Miliband சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகடல் எண்ணெய் அகழ்வு குறித்த விவாதங்கள் நீடித்தாலும், நீண்டகால தீர்வாக பசுமை எரிசக்தியையே அரசாங்கம் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














