கொலையாளி ஒருவர் இனவெறித் தாக்குதல் நடத்தியதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்ட வழக்கு தொடர்பாக, பிரிட்டிஷ் காவல்துறை செவ்வாயன்று (02) கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடந்த கத்தித் தாக்குதலில் ஹென்றி நோவாக் உயிரிழந்தார்.
தனது சீக்கிய மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகத் தன்னிடம் வைத்திருந்ததாக் கூறிய 21 செ.மீ (8 அங்குலம்) நீளமுள்ள கத்தியால் பதின்வயது இளைஞரைக் குத்திய குற்றத்திற்காக, 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு திங்களன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹென்றி நோவாக் கொலைக்கு அதிகாரிகள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர்.
கத்திக்குத்து நடந்த இடத்தில், தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு ஆளானதாக திக்வா அதிகாரிகளிடம் பொய் கூறியதைத் தொடர்ந்து, 18 வயதான சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மாணவர் கைவிலங்கிடப்பட்டு, காவல்துறையினரிடம் “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று கூறுவதை காணொளிப் பதிவு காட்டுகிறது.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை இங்கிலாந்து முழுவதும் இனப் பதட்டத்தை தூண்டியுள்ளது.
குறிப்பாக செவ்வாய்க்கிழமை மாலை, சவுத்தாம்ப்டனில் பல நூறு மக்கள் கூடியதையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்புப் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.













