பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூர் குடிமைப் பாதுகாப்பு அலுவலக இயக்குநர் ரொட்ரிகோ சொஸ்மென்யா வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 12 பேர் சோக்ஸ்க்சார்ஜென் (Soccsksargen) பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிராந்தியம் தென் கொட்டபடோ (South Cotabato), சுல்தான் குடராத் (Sultan Kudarat), சரங்கானி (Sarangani) ஆகிய மாகாணங்களையும் ஜெனரல் சாண்டோஸ் நகரத்தையும் உள்ளடக்கியதாகும்.

மேலும், அந்தப் பகுதியில் மட்டும் குறைந்தது 129 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர உதவிக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தொடர்ந்து ஏற்படக்கூடிய பிந்தைய அதிர்வுகள் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேத மதிப்பீட்டு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.













