ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட திறந்தவெளி திருப்பலியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினுக்கான அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் இரண்டாவது நாளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
போப் லியோ XIV தனது போப்பாண்டவர் வாகனத்தில் (Popemobile) நகரின் முக்கிய வீதிகள் வழியாக பயணித்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஸ்பெயின் மன்னர் பெலிபே VI மற்றும் ராணி லெடிசியா ஆகியோரும் திருப்பலியில் பங்கேற்றனர்.
மாட்ரிடின் புகழ்பெற்ற பிளாசா டி சிபெலெஸ் சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது, பக்தர்கள் ஸ்பெயின் மற்றும் வத்திக்கான் கொடிகளை அசைத்து “போப் நீண்ட நாள் வாழ்க” என்று முழக்கமிட்டனர். மேலும், போப் வருகையை வரவேற்கும் வகையில் மலர் இதழ்களும் தூவப்பட்டன.
தனது உரையில் போப் லியோ XIV, மதநம்பிக்கையை வெறும் வழிபாட்டிற்குள் மட்டுப்படுத்தாமல், பிறருக்கு உதவுவதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “இறைவன் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தனிமையில் வாழ்பவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், மதத்தை “கடந்த கால நினைவுச் சின்னமாக அல்ல, இன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நம்பிக்கையின் பள்ளியாக” பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலமும் பாதுகாப்பாக நடைபெறுவதற்காக அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். போப்பின் உருவப்படங்கள் கொண்ட பதாகைகள் மற்றும் வத்திக்கான் கொடியின் நிறங்களான வெள்ளை, மஞ்சள் மலர்களால் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.















