கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இன்று (14) அதிகாலை வேளையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அப்பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தொம்பே – பரங்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் ‘கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (Ice) போதைப்பொருளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டார்.
கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் STF-இன் கோனஹேன முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது ஆயுதங்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.











