அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தீவிர இராணுவ பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான ஆரம்பக்கட்ட உடன்பாட்டை இரு நாடுகளும் நேற்று எட்டியுள்ளன.
இருப்பினும், இந்த தற்காலிக உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி அங்கீகாரம் (Final Approval) இன்னும் தேவைப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வொஷிங்டனில் ஈரானிய ட்ரோன் (Drone) என சந்தேகிக்கப்பட்ட ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த நம்பகமான நபர் ஒருவரை மேற்கோள் காட்டி ‘ரொயிட்டர்ஸ்’ (Reuters) மற்றும் ‘அக்சியோஸ்’ (Axios) ஆகிய சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் தங்களது இராணுவ மோதல்களை நிறுத்தி, போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) பரஸ்பரம் சம்மதித்துள்ளன.
இதேவேளை, இந்த 60 நாட்கள் காலப்பகுதிக்குள் ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் (Nuclear Program) குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தணிந்து, அமெரிக்கா – ஈரான் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளதான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் (Crude Oil Prices) அதிரடிச் சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















