தென்னாபிரிக்காவின் பிரதான நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் நள்ளிரவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஜோகன்னஸ்பேர்க்கின் புறநகர்ப் பகுதியான கிளிவ்லேண்டில் (Cleveland) உள்ள தற்காலிகக் குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஒன்றிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய சந்தேகநபர்கள் மினிபஸ் (Minibus) ஒன்றில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிக்கு வந்துள்ளனர்.
வாகனத்திலிருந்து இறங்கிய அவர்கள், அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
ஜோகன்னஸ்பேர்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக இத்தகைய கூட்டுத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (Mass shootings) கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இந்தத் துப்பாக்கிச் சூடுகள் பெரும்பாலும் அப்பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் தங்கம் மற்றும் கனிமச் சுரங்கக் கொள்ளைக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவை எனப் பொலிஸார் கருதுகின்றனர்.














