லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் இன்று (27) நடைபெறும் தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளுக்குப் பின்னர், இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.
இலங்கை நேரப்படி இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணியை 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
இருப்பினும், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் நெருக்கடியினால் அந்த இலக்கினை எட்ட இலங்கை அணியால் முடியவில்லை.
அவர்கள் 37 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
லீட்ஸில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியது.
அணித் தலைவர் குசல் மெண்டிஸ் அபாரமான சதம் அடித்து, இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்.
சேஸிங்களில் இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் இன்றைய போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஒட்டு மொத்தத்தில், இவ்விரு அணிகளும் 84 முறை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் இங்கிலாந்து 41 போட்டிகளிலும், இலங்கை 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஒரு போட்டி சமனில் முடிந்ததுடன், மூன்று போட்டிகள் முடிவின்றி நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














