2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் தொகைக்காக கடத்துவதற்கு பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்லாமபாத்தின் உளவுத்துறை பணியகம் திங்களன்று (24) உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பயங்கரவாத எச்சரிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP), இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட பிற குழுக்கள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளால் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலியாக, 2025 சாம்பியன் டிராபியில் பங்கெடுக்கம் வீரர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பணியாளர்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர் பொலிஸ் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்புக் குழுக்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நிறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது.
இது நாட்டின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
எனினும், உயர்மட்ட சர்வதேச நிகழ்வுகளை நடத்தும் நாட்டின் திறனைப் பற்றிய பாதுகாப்பு கவலைகள் இப்போது பெரிதாக அதிகரித்து வருகின்றன.
2024 ஆம் ஆண்டு ஷங்கலாவில் சீனப் பொறியியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் போன்றவை பாகிஸ்தானில் வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளன.
இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்தியா, துபாயில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை இந்தியாவின் இந்த முடிவின் பின்னணியில் முக்கிய காரணிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது.