பிலிப்பைன்ஸில் திங்கட்கிழமை (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை அழித்ததோடு, ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக (ஞாயிற்றுக்கிழமை 23:40 GMT) மின்டானோ தீவின் சரங்கானி மாகாணத்திற்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோ மீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்தக் கடற்பரப்பு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனடல் நகரில் சுமார் 30 வினாடிகள் நீடித்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்நகரின் சில பகுதிகளிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் இணையம், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகளைத் தடை செய்தது.
நிலநடுக்கத்தை அடுத்து பல பாடசாலைகளின் அதிகாரிகள் அவசரகால நெறிமுறைகளைச் செயல்படுத்தியதால், மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளிலிருந்து அவசரமாக வெளியேறினர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரையிலான சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்றும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் 1 மீட்டர் (3.3 அடி) வரையிலான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் முன்னதாக எச்சரித்திருந்தது.
முன்னர் 8.2 ரிக்டர் அளவில் மதிப்பிடப்பட்டிருந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் குறைத்த அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளது.
எவ்வாறெனினும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள் அபாயகரமான அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து, கடலோரப் பகுதிகளில் உள்ள குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சரங்கானி, டாவோ ஆக்சிடென்டல், டவி-டவி மற்றும் சுலு உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கோ அல்லது மேலும் உள்நாட்டிற்கோ வெளியேற வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (PHIVOLCS) தெரிவித்துள்ளது.
அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், பிலிப்பைன்ஸ் உலகின் மிகவும் பேரழிவு அபாயம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மேலும், அந்நாடு வெப்பமண்டலப் புயல்கள் மற்றும் சூறாவளிகளாலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.












